Skip to content
Home » ”லியோ” படப்பிடிப்பு நிறைவு….

”லியோ” படப்பிடிப்பு நிறைவு….

6 மாதங்களாக நடைபெற்ற ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் பரவி வந்தன. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் விஜய் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று அனைத்து படப்பிடிப்பும் முடிந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு! இந்தப் படத்தில் தங்கள் ஆன்மாவை ஈடுபடுத்திக் கொண்ட நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி. இந்தப் பயணம் மீண்டும் என் இதயத்துக்கும் தனிப்பட்ட வகையில் மிகவும் நெருக்கமானதாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!