கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த 97,33,543 ரூபாய் பணத்தை மீட்ட சைபர் க்ரைம் போலீஸார், அவற்றை உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் தொலைந்த செல்போன்களை கண்டறிய சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஆன்லைன் வேலை வாய்ப்பு, ஆன்லைன் முதலீடு, டிஜிட்டல்

அரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த 15 நபர்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், காணாமல் போன 136 செல்போன்களும், சைபர் குற்றங்கள் மூலம் இழந்த 97,33,543 ரூபாய் பணமும் மீட்கப்பட்டன.
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணத்தை உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீப காலமாக “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், “டிஜிட்டல் அரெஸ்ட்” என்பது

உலகில் எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்று எனவும் தெரிவித்தார். இவ்வாறான அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

