மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் மீட்புப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு தாயின் உடல் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. டெல்லியில் இருந்து சுற்றுலா வந்த அந்தத் தாய், படகு கவிழ்ந்த இக்கட்டான சூழலில் தான் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டுக்குள் தனது 4 வயது மகனை அணைத்து வைத்துப் பாதுகாத்துள்ளார்.உயிர் பிரியும் தருவாயிலும் அவர் தனது பிடியைத் தளர்த்தவில்லை. மீட்புப் படையினர் உடல்களை மீட்கும் போது, அந்தத் தாய் தனது மகனை மார்போடு இறுக்கமாக அணைத்திருந்த கோலத்திலேயே காணப்பட்டார். லைஃப் ஜாக்கெட்டின் உதவியால் அவர் மட்டும் தப்பிக்க முயன்றிருக்கலாம், ஆனால் தனது பிள்ளையைத் தனியாக விட மனமில்லாமல் அவரோடே ஜலசமாதி அடைந்துள்ளார்.
தற்போது வரை 28 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான மேலும் 4 பேரைத் தேடும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சொகுசு படகு சவாரிகளுக்கு மத்திய பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
