மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ரூ.60 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் தாசில்தாரும், துணை ஆட்சியருமான அன்பழகன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த துணை ஆட்சியர் அன்பழகன், விஏஓ மற்றும் இளையராஜா உள்ளிட்ட மொத்தம் 19 பேர் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த நில மோசடி விவகாரங்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் மீறி, மதுரை பீபி குளம் பகுதியில் உள்ள சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட, கிட்டத்தட்ட ரூ. 60 கோடி மதிப்பிலான இந்தச் சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட புகாரின் அடிப்படையில்தான் தற்போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், துணை ஆட்சியர் அந்தஸ்திலும் உள்ள அன்பழகன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சிறையில் உள்ள அன்பழகனைத் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
