கும்பகோணம் அருகே பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா தராததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் உமர் முக்தார் மற்றும் முகமது யாசின் ஆகியோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாசத்திரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பிரியாணி கடைக்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு அவர் பரோட்டா கேட்டுள்ளார். இதையடுத்து கடை ஊழியர்கள் அவருக்கு பரோட்டா மற்றும் சால்னா வழங்கியுள்ளனர்.
சாப்பிட்டு கொண்டிருந்த சதீஷ், கூடுதலாக சால்னா கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கடை ஊழியர்கள், “அளவாகத்தான் சால்னா வழங்க முடியும்” என தெரிவித்துள்ளனர். இதனால் சதீஷுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடை உரிமையாளர்கள் சதீஷை சமாதானப்படுத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்ற சதீஷ், தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அவர்களை ஹோட்டலுக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் சதீஷின் நண்பர் பழனி அங்கு வந்துள்ளார். பின்னர் சதீஷும் பழனியும் இணைந்து உமர் முக்தார் மற்றும் முகமது யாசின் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே, முகமது யாசினும் உமர் முக்தாரும் தங்களைத் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக பழனி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சதீஷ் மற்றும் பழனி ஆகியோர் ஹோட்டல் உரிமையாளர்களை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய திருவிடைமருதூர் போலீசார், சதீஷை கைது செய்தனர்.
மேலும், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் சதீஷுக்கும் இடையே வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா வழங்குவதில் ஏற்பட்ட தகராறு அரிவாளால் வெட்டும் அளவுக்கு சென்ற சம்பவம் அம்மாசத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
