தூத்துக்குடி புதிய துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் லாரியில் தார்ப்பாய் போட்டுக் கொண்டிருந்தபோது இடி மின்னல் சத்தம் கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சியில் தவறி கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தெர்மல் நகர் லேபர் காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மாப்பிள்ளைசாமி (58). இவர் ஹார்பரில் கடந்த 30 வருடங்களாக லாரிகளில் தார்ப்பாய் போடும் வேலை செய்து வந்தார். இவருக்கு சண்முகலட்சுமி (54) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில், மாப்பிள்ளைசாமி புதிய ஹார்பர் கிரீன் கேட் பகுதியில் லாரியில் தார்ப்பாய் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பெய்த மழையின்போது பயங்கர இடி, மின்னல் சத்தம் கேட்டுள்ளது. அந்த இடி மின்னல் சத்தத்தின் அதிர்ச்சியில் லாரியின் மேலே இருந்து எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
