Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

ரத்லம்: கேரளாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் அதிகாலை திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி ஹசரத் நிஜாமுதீன் நோக்கி (ரயில் எண் 12431) சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ், இன்று அதிகாலை சுமார் 5.15 மணி அளவில் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள விக்ரம்கர் ஆலோட் மற்றும் லுனிரிச்சா ரயில் நிலையங்களுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது ரயிலின் பி-1 ஏசி பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்து பீதியில் ஆழ்ந்தனர்.

உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்த பெட்டியில் மொத்தம் 68 பயணிகள் இருந்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து செயல்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதன் மூலம் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

மேலும், தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்க, தீப்பிடித்த பெட்டி உடனடியாக ரயிலில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

பின்னர், பாதிக்கப்பட்ட பயணிகள் மற்ற பெட்டிகளில் தற்காலிகமாக அமர வைக்கப்பட்டனர். ரயில் பயணத்தை தொடர வசதியாக கோட்டா நிலையத்தில் புதிய பெட்டி இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ரத்லம் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் விபத்து நிவாரண ரயில் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடி மற்றும் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!