அறந்தாங்கி அருகே மீமிசலில் நேற்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்தில், 10 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்சில் பல்பொருள் அங்காடி, பேன்சி ஸ்டோர், மளிகை கடை, பெட்டிக்கடை, பழக்கடை, செருப்புக்கடை, செல்போன் பழுது பார்க்கும் கடை உட்பட 10 கடைகள் இயங்கி வந்தது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடைகளை பூட்டி விட்டு உரிமையாளர்கள் வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் தேவூரை சேர்ந்த சுலைமான் என்பவரின் பல்பொருள் அங்காடியில் இருந்து புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் அந்த அங்காடி தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மேலும் அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியது. பின்னர் 10 கடைகளும் தீப்பிடித்து எரிந்து அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இது பற்றி ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் 10 கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. மீமிசல் போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
