சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் 2,000 மாணவர்கள் நேரிலும், 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொலி வாயிலாகவும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் ‘போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ 2023ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. அதன்படி, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
மேலும், போதைப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதலமைச்சர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்வையிட்டார்.
