Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதியோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா… உதவிக்கரம் கேட்கும் நிலைமை?..

முதியோர் இல்லத்தில் மோகன் சர்மா... உதவி கேட்கும் நிலை?

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த மோகன் சர்மா, தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருகிறார். 

புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் மோகன் சர்மா. 

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். 20 படங்களை தயாரித்துள்ளார். 

முதல்வர் விஜய் நடித்த சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு தந்தையாக நடித்திருப்பார்.

நடிகை தேவயானி நடிப்பில் 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

தேசிய விருது தேர்வு குழுவிலும், சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்திய பனோரமா படங்கள் தேர்வு குழுவிலும் இடம்பெற்றவர்.

தாதா சாகேப் பால்கே சாதனை விருதுக்கு தென்னிந்திய பிரதிநிதித்துவ உரிமையை போராடி பெற்றவர். 

2012 இல் நம்ம கிராமம் என்ற படத்தை இயக்கினார். ஜாதி கொடுமை, பெண் கொடுமை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தமிழக அரசு மற்றும் கேரள அரசின் விருதுகளை பெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த படத்தை பார்த்து மோகன் சர்மாவை வெகுவாக பாராட்டினார்

இப்படி திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த மோகன் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கை சொல்லும்படியாக இல்லை. 

முதலில் நடிகை லட்சுமியை திருமணம் செய்த மோகன் சர்மா பின்னர், விவாகரத்து பெற்று இரண்டாவதாக சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

தற்போது 80 வயதாகும் அவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகியுள்ளார். 

அங்கு அவருக்கு தங்க இடமும் உணவும் கிடைக்கும் நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சினைகளுக்கு மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தவித்து வந்துள்ளார். 

இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார். 

இதுகுறித்து மோகன் சர்மா பல்வேறு ஊடகங்களிடம் அளித்த பேட்டியில், ”போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு அருகில்தான் எனது வீடு இருந்தது.  ஜெயலலிதாவிற்கு என்னுடைய நம்ம கிராமம் படம் மிகவும் பிடித்து, அதைத் தன் ஆல்-டைம் சிறந்த 10 படங்களில் 5-வது இடத்தைப் பெற்ற படம் என கூறினார்.  

இப்படத்தை முடிக்கத் தன்னிடம் வங்கியில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான பங்குகளை விற்றும், வங்கியில் ரூ.1.25 கோடி கடன் வாங்கியும் தயாரித்தேன். இந்த கடனை அடைப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் திடீரென அவர் இறந்துவிட்டார். 

தற்போது, கையில் மாத்திரை வாங்கக்கூடப் பணமில்லாத சூழ்நிலை ஏற்பட்டதால், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள நந்தியம்பாக்கத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்திற்கு வந்து தங்கிவிட்டேன்.  எனக்கு வேற வழியில்லை. கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்தேன். இதுதான் என் வாழ்க்கையாகிவிட்டது. 

தனது உடல்நிலை குறைபாடுகள் மற்றும் கால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு கையில் பணமில்லாமல் தவித்தேன்.  

நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொலைபேசியில் அழைத்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று ரூ.1 லட்சம் வழங்கி கடவுள் போல உதவினார். 

சினிமாவில் கவனமாக இருங்கள். நல்ல படம் எடுக்கிறோம் என்று என்னை போல் ஆகிவிடாதீர்கள். 

எனக்கு ஒரே பையன் ஜெர்மனியில் இருக்கிறான். என்னை பார்த்துக் கொள்வதாக கூறினான். ஆனால் அவன் செட்டில் ஆக வேண்டும் என்பதால் அனுப்பி வைத்துவிட்டேன். 

என்னுடைய ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கிக்கொண்டால்,  மிச்சமிருக்கிற காலத்துக்கு எனக்கு மருந்து மாத்திரை வாங்க உதவியாக இருக்கும். 

ஃபிலிம் சேம்பரில்  நான்  பொறுப்பில் இருந்தபோது வயதான காலத்தில் நோய் நொடியால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு  5 லட்சம் ரூபாய் வழங்கலாம் என்று தீர்மானம் போட்டிருந்தேன். 

அதை சுட்டிக்காட்டி சேம்பருக்கு கடிதம் எழுதி உதவி கேட்டேன். ஆனால் அந்த தீர்மானம் திருத்தப்பட்டு விட்டதாக தகவல் வந்தது. அதாவது இறந்த பின் தான் அந்த பணத்தை தருவார்கள் என்று தெரிவித்திருந்தார்கள்.   இறந்த பின் அந்த பணம் எதற்கு என்று கேட்டதற்கு பதில் இல்லை. 

தற்போது தனிமையில் இருப்பது வேதனையாக இருக்கிறது. இப்போது நடிப்பதற்கு ஒரு ஆஃபர் வந்திருக்கிறது. ஆனால் அதற்கு ஆகஸ்ட்டில் தான் தேதி கொடுத்திருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் உள்ளார். அவரை 20 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். மிகவும் நல்ல மனிதர். அவரையும் சந்திக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறேன்.  இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!