“கூட்டணிக் கட்சி ஆதரவுகளுடன் தான் ஆட்சி நடைபெறுகிறது அப்படி இல்லை என்று நினைத்தால் எங்களுடைய முடிவு வேற மாதிரி இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை….”
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
தமிழ்நாடு அரசு சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இத்திட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது….
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் பட்டினப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கடலோரப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்டமான அரசு கட்டிடத் திட்டத்தை செயல்படுத்துவதால், பாரம்பரியமாக அங்கு வசித்து வரும் மீனவ குடும்பங்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது…
இதைத்தொடர்ந்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அடித்தார்…
அப்போது பேசிய அவர்…..
புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பது என்ற தமிழ்நாடு அரசின் முடிவை கண்டித்து, அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஏற்கனவே உள்ள தலைமைச் செயலகத்தில் போதுமான இடவசதி இல்லாமல் கடுமையான நெருக்கடி இருப்பது உண்மை. பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டது. பின்னர் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள பட்டினப்பாக்கம் பகுதி முற்றிலும் பொருத்தமற்றது.
2004-ம் ஆண்டு சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி இது. அதிகாரிகள் சுனாமி பாதிப்பை அறிந்தவர்கள்தான். அப்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்கு நிவாரணமும் வீடுகளும் வழங்கியுள்ளனர். எனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு.
இனிமேல் சுனாமி வராது என்ற முடிவுக்கு தமிழ்நாடு அரசு வந்துவிட்டதா அல்லது சுனாமியைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
கடற்கரைக்கு அருகில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் குடியிருப்புகளையும் பாதிக்கக்கூடிய வகையில் இந்தத் திட்டத்தை அமைப்பது ஏற்கத்தக்கதல்ல. யார் இந்த யோசனையை கூறியிருந்தாலும், அது நிராகரிக்கப்பட வேண்டிய ஆலோசனை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
அதே நேரத்தில், நிர்வாக நகரம் என்ற பெயரில் சென்னைக்கு வெளியே பல நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என்ற யோசனையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. சென்னைக்குள்ளேயே புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை அமைப்பதற்கு பல்வேறு இடங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும். அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மாற்று இடமாக பரிசீலிக்கலாம். யாரையும் அப்புறப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லாத இடங்கள் உள்ளன.
ஆனால் மாற்று யோசனைகளை ஆராயாமல் அவசர அவசரமாக அரசாணை எண் 564 வெளியிடப்பட்டிருப்பது, நியாயமான ஆலோசனைகளைக்கூட ஏற்காத அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. எனவே அரசாணை எண் 564-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் காலம் காலமாக தொடர்ந்து செயல்படக்கூடிய வகையில், அனைவருக்கும் பொருத்தமான பொதுவான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்து கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, பல்வேறு இடங்களை பரிசீலித்து பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பட்டினப்பாக்கம் எந்த வகையிலும் பொருத்தமான இடம் அல்ல. சென்னை நகரத்துக்குள்ளேயே தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய தலைமை அலுவலகங்களும் உள்ளன. சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகத்தையும் சட்டமன்றத்தையும் கொண்டு சென்றால், மற்ற தலைமை அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் நிர்வாகப் பணிகள் எவ்வாறு நடைபெறும் என்பதும் கேள்வியாகிறது.
மேலும், சாந்தோம் நெடுஞ்சாலை ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக உள்ளது. ஏராளமான பள்ளிகளும் அப்பகுதியில் உள்ளன. முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தினமும் வந்து செல்லும் வகையில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதி மக்களுக்கு மேலும் கடுமையான நெருக்கடி ஏற்படும்.
மீனவர்களுக்கு அந்தப் பகுதியில் தரமான வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக தலைமைச் செயலகம் அமைப்பது சரியான அணுகுமுறை அல்ல. மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் யோசனையை உடனடியாக கைவிட வேண்டும். மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று, சென்னைக்குள்ளேயே பொருத்தமான இடத்தை கண்டறிய வேண்டும்.
அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் முக்கியமான பங்கு இருக்கிறது. அதிகாரிகள் இல்லாமல் எந்த ஆட்சியாளர்களும் தன்னிச்சையாக நிர்வாகத்தை நடத்த முடியாது. எந்த ஆட்சி இருந்தாலும் அதிகாரிகள் நிர்வாகத்தில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள். எனவே அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.
பட்டினப்பாக்கத்தில் திட்டப் பணிகளை தொடங்கினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதைத் தடுக்கும். முதலமைச்சருக்கான நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் சுமார் ரூ.6 கோடி செலவில் தனிப்பட்ட அறைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. புதிய தலைமைச் செயலகம் உடனடியாக கட்டி முடிக்கப்படப்போவதில்லை என்பதால், இடைக்கால வசதியாக அந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படலாம். ஆனால் பட்டினப்பாக்கம் போன்ற மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய, கடல் அரிப்பு, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட ஆபத்துகள் உள்ள பகுதியில் தலைமைச் செயலகத்தை அமைப்பது பொருத்தமற்றது.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய கடிதம் உண்மையாக இருந்தால் அது கண்டனத்துக்குரியது. சென்னை விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முறையில் முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தால், அந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த தனியார்மய நடவடிக்கைகளுக்கு துணை போகும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தால், அதை ஏற்க முடியாது.
அந்தக் கடிதம் தொடர்பான எந்த தகவலும் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். கடிதம் உண்மையாக இருந்தால், அது திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டன உரை…
எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்ப்பு வர தான் செய்யும் என செங்கோட்டையன் கூறினார்….
எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எதிர்க்கவில்லை…
அனைத்து அடிப்படை வசதி கொண்டதாக எதிர்கால வளர்ச்சியும் கருத்தில் கொண்டு சட்டமன்றம் உருவாக வேண்டும்….
பொருத்தமற்ற இடத்தை தமிழக வெற்றி தழக அரசு புதிய தலைமை செயலகம் கட்ட தேர்வு செய்துள்ளது….
புதிய தலைமை செயலகம் வந்தால் இங்க இருக்கக்கூடிய பள்ளிகளை அரசு காலி செய்து விடுமா???
எந்த சாதகமான சூழ்நிலையும் மீனவர்களுக்கு அரசு உருவாக்கி தரவில்லை…
*விஜய்க்கு கடற்கரை ஓரம்தான் தலைமைச் செயலகம் வேண்டுமென்றால் பட்டினப்பாக்கம் சாலையை தாண்டினால் ஆல் இந்தியா ரேடியோவிற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம், டிஜிபி அலுவலகம் உள்ளது அதனை எடுத்து தலைமை செயலகம் கட்டிக் கொள்ளுங்கள் என்றார்…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேல் சிப்காட் தீர்வு கைவிடப்படும் என்று இப்போதைய அமைச்சர்கள் உறுதி கொடுத்தார்கள்…
மேல்மா சிப்காட் திட்டத்திற்கு கைவிடப்பட்ட திட்டத்தை எடுப்பதற்கு மீண்டும் தமிழக வெற்றிக்கழக அரசாங்கம் அரசாணை வெளியிடுகிறது…
அனைத்தும் அரசாங்கத்திற்கு தெரிந்துதான் நடைபெறுகிறதா…
எதிர்ப்பு வந்தவுடன் அரசாணையை ரத்து செய்கிறோம் என்று அறிவித்துள்ளனர்…
மிஸ்டர் விஜய் சார் 34 சதவீதம் பேர் தான் உங்களுக்கு வாக்களித்து உள்ளார்கள் 100% தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை…
கூட்டணிக் கட்சி ஆதரவுகளுடன் தான் ஆட்சி நடைபெறுகிறது அப்படி இல்லை என்று நினைத்தால் எங்களுடைய முடிவு வேற மாதிரி இருக்கும் என எச்சரித்தார்.
