முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடனும், ராட்சத அலைகளுடனும் சீற்றமாகக் காணப்படுகிறது. வங்கக்கடலில் தற்பொழுது உருவாகியுள்ள முரசு புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் இன்று நள்ளிரவு நேரத்தில் தெற்கு ஆந்திரப்பிரதேச கடற்கரை நரசாபுரம் (Narsapur) மற்றும் ஒங்கோல்(Ongole) இடையே கரையை கடக்க இருக்கின்றது. இதன் காரணமாக இன்றைய தினம் பல்வேறு இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
குறிப்பாக, முரசு புயலின் காரணமாக பட்டினப்பாக்கம், மெரினா, காசிமேடு எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகளில் சீற்றம் காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காவல் துறை சார்பிலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மெரினா, பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் அதிக உயரத்துடன் ஆக்ரோஷமாக எழும்புவதால், பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம் என்று சென்னை காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்து நிலையிலும் பொதுமக்கள், ஆபத்தை உணராமல் கடல் சீற்றத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் தரைக்காற்று என்பது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் காற்றினுடைய வேகம் கடல் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
