இந்தியப் பொருளாதாரம் 1991-இல் தாராளமயமாக்கப்பட்டபோது, ஒரு டாலரின் மதிப்பு வெறும் 17 ரூபாயாக இருந்தது. 2025-க்குள் அது 90 ரூபாயை நெருங்கியது. கடந்த 34 ஆண்டுகளில் இது 80% சரிவு என்றாலும், ஆண்டுக்குச் சராசரியாக 4.5% என்ற மெதுவான வேகத்தில் சரிந்ததால் நமக்கு இது பெரிய பாதிப்பாகத் தெரியவில்லை.
அமெரிக்காவை விட இந்தியாவில் பணவீக்கம் (Inflation) எப்போதும் அதிகமாக இருப்பதாலேயே நாணய மதிப்பு குறைகிறது. பொருளாதார வல்லுநர்கள் இதனை ‘வாங்கும் திறன் சமநிலை’ (Purchasing Power Parity – PPP) என்கிறார்கள். இந்த 4.5% என்ற வரலாற்றுச் சரிவு தொடர்ந்தால், இன்னும் பத்து ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு 150-ஐத் தொடுவது இயல்பானதுதான். ஆனால், தற்போதைய சூழல் இந்தச் சரிவை மேலும் வேகப்படுத்தியுள்ளது.
ரூபாயை அதளபாதாளத்திற்குத் தள்ளும் 3 முக்கிய காரணங்கள்
கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%-ஐ இறக்குமதி செய்கிறது. மேற்கு ஆசியப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 110 டாலரைக் கடக்கும்போது, இந்தியா அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது. டாலருக்கான தேவை அதிகரிக்கும் போது ரூபாய் மதிப்பு பலவீனமடைகிறது.
பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள் (FPI): இந்த ஆண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து 2.17 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் பங்குகளை விற்கும்போது ரூபாயைத் டாலராக மாற்றுவதால், சந்தையில் டாலரின் தேவை கிடுகிடுவென உயர்கிறது.
ரிசர்வ் வங்கியின் (RBI) மறைமுகக் கடன்கள்: டாலர் தேவையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி நேரடியாகத் தனது கையிருப்பு டாலர்களை விற்காமல், ‘ஃபார்வர்டு மார்க்கெட்’ (Forward Markets) எனப்படும் எதிர்காலச் சந்தையில் ‘பிறகு டாலர்களைத் தருகிறோம்’ என உறுதியளிக்கிறது. இப்படி ரிசர்வ் வங்கியின் எதிர்கால டாலர் கடன் பொறுப்பு (Net Short Dollar Position) முதல் முறையாக 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இது எதிர்காலத்தில் ரூபாய்க்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும்.
ரூபாய் 150-ஐ எப்போது தொடும்? அடுத்த 5 ஆண்டுகள் சவாலானதா?
பொதுவாக நாணயங்கள் காலப்போக்கில் பலவீனமடைவது வழக்கம் என்பதால், இந்திய ரூபாய் 150 என்ற எல்லையைத் தொடுவது உறுதிதான். ஆனால் கேள்வி என்னவென்றால் ‘எப்போது?’.
தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் நீடித்தால், ரூபாயின் வருடாந்திர சரிவு வேகம் 4.5%-லிருந்து 6-7% ஆக அதிகரிக்கலாம். அப்படி நடந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் நடக்க வேண்டிய இந்தச் சரிவு, அடுத்த 5 ஆண்டுகளிலேயே (அதாவது 2031-க்குள்) நடந்துவிடக் கூடும். நிபுணர்களின் கணிப்புப்படி, 2027-க்குள் ரூபாய் மதிப்பு உளவியல் ரீதியான எல்லையான 100 ரூபாயைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 150 ரூபாய் என்பது வெறும் கற்பனை அல்ல; இந்தியா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பாதையின் இறுதி இலக்குதான் அது!
