Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

52 கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடு – செல்போனுக்கு நோ என்ட்ரி!

52 கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடு –செல்போனுக்கு நோ என்ட்ரி!

கோயில்களுக்குள் செல்போன்களைப் பயன்படுத்திப் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்பிக்கள் எடுப்பதுடன், ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகக் கோயில்களில் கட்டணத்துடன் கூடிய பாதுகாப்புப் பெட்டக வசதிகள் (Locker facility) ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெரிய கோயில்களில் ஒரே நேரத்தில் 20,000 செல்போன்கள் வரை வைக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடை அமலாகும் முக்கியக் கோயில்கள்:

சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில் ஆகியவை அடங்கும்.

மேலும் திருச்செந்தூர் முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், குற்றாலநாதர் கோயில், பண்பொழி திருமலை குமாரசாமி கோயில், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், சுசீந்திரம், மதுரை அழகர் கோயில், இராமேஸ்வரம் உள்ளிட்ட 52 முக்கியக் கோயில்களில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை:

திருவிழா காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை விடுதிகள் அல்லது வாகனங்களிலேயே வைத்துவிட்டு வருவதே சிறந்தது என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தடையையும் மீறி கோயில்களுக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்டால், அதற்குப் பொறுப்பான கோயில் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!