Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவை சுமார் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்த மே 13- ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தவெக அரசுக்கு ஆதரவாகப் பேசினார். இதனால் தமிழக வெற்றிக் கழகம் அரசு 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

இதையடுத்து, அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிப் பெற செய்த மன்னார்குடி வாக்காளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

30 ஆண்டுக்காலம் மன்னார்குடி பகுதியில் அனைத்து தரப்பு மக்களுடனும் பழகியிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் எனக்கு வாக்களித்துள்ளனர். அந்த மக்களுக்கு கடைசி வரை உணமையாகவும், நேர்மையாகவும் இருந்து மன்னார்குடியை வளர்ச்சியடையச் செய்வதற்கு சட்டமன்றப் பணிகளை மிகச் சிறப்பாக செய்வேன்.

கடந்த மே 10 -ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். மே 11- ஆம் தேதி சட்டப்பேரவையில் 233 பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டோம். மே 12- ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியின்றி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு கட்சி சார்பாக வாழ்த்துவதும், பாராட்டுவதும் மரபு. அந்த அடிப்படையில் என்னையும் அழைத்தார்கள். நான் வாழ்த்தினேன், பாராட்டினேன். முதலமைச்சரையும் வாழ்த்தினேன்.

எனது இரண்டு செல்ஃபோன்களும் காரில் இருந்தன. நான் பேரவையில் இருந்து வெளியில் வந்ததும் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல் கிடைத்தது. அதனால் நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. மே 13- ஆம் தேதி முதலமைச்சர் தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது நான் எந்த கட்சியிலும் இல்லாததாலும், கட்டுப்பாடுகள் இல்லாததாலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டேன். இதில் தவறு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!