திருவள்ளூர்: நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை சென்னை போலீசார் திடீரென மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 2016ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக பாம் சரவணன் தனது மனைவி மகாலட்சுமி மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் வந்துள்ளார். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பின்னர் காரில் சென்று கொண்டிருந்தபோது, திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே அவரது காரை சென்னை போலீசார் திடீரென மடக்கி நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காரில் இருந்து பாம் சரவணனை கீழே இறக்கிய போலீசார், அவரை தங்களது காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் உடன் வந்த வழக்கறிஞர்கள், பாம் சரவணனை எதற்காக கைது செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
ஆனால், கைது தொடர்பான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படாததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கணவரை எதற்காக போலீசார் அழைத்துச் செல்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறி மகாலட்சுமி அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, பாம் சரவணனை போலீசார் அழைத்துச் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற சிலர், அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக பாம் சரவணனை போலீசார் கைது செய்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. பாம் சரவணனின் சகோதரர் தென்னரசு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெயசீலன் என்பவர் 2016-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பாம் சரவணன் குற்றவாளியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில், சென்னை போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் திடீரென மடக்கிப் பிடித்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
