தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தவெக அரசு நடத்திய அதிரடி சோதனையில், எம்.ஆர்.பி (MRP) விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரே நேரத்தில் 277 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர டாஸ்மாக் நிர்வாகம் 5 கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிற்சங்கங்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் சங்கங்களின் மிரட்டல்களுக்கும் போராட்ட அழுத்தங்களுக்கும் அரசு பணியாது என்று தவெக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்: கூடுதல் கட்டண வசூலைத் தடுப்பது, மதுபானக் கடைகளை முறைப்படுத்துவது மற்றும் வருவாய் இழப்பைத் தடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்றதாக வந்த புகார்களின் பெயரிலும் முறைகேடுகளில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தொழிற்சங்கங்கள் அரசை மிரட்டி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. எனவே ஒட்டுமொத்தமாக டாஸ்மார்க் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசித்து வருகிறது.
