Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்காக அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 2026-27ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 4ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. ஆனால், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கடந்தும், தகுதியான மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகை மற்றும் தேவையான நிதி வழங்கப்படவில்லை என இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு இந்த உதவித்தொகை முக்கியமானதாக உள்ள நிலையில், உரிய நேரத்தில் நிதியை வழங்காமல் தமிழக அரசும் சமூகநீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் தாமதப்படுத்துவது கண்டனத்திற்குரியது என இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் மாணவர்கள் வஞ்சிக்கப்படும் நிலையை தமிழக அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் அயலக உயர்கல்வி உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!