“ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்” ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!
படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை!
கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயிலில் நபர்

ஒருவர் பயணித்து உள்ளார். ரயில் கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதிக்கு வந்த போது, எதிர்பாராத விதமாக அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உள்ளார்.
இதில் அவருக்கு தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டு இருந்தது.
ரயில் பாதையின் அருகே நபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயம் அடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே இருகூர் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரயிலின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு பயணிப்பதே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகத்தினரும் ரயில்வே காவல் துறையினரும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
