இந்தியாவில் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் குறித்து எழுந்த விவாதங்களுக்கு மத்தியில், மத்திய அரசு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் என்பது முதன்மையாக வெளிநாட்டு பயணத்திற்காக வழங்கப்படும் பயண ஆவணம் மட்டுமே; அது குடியுரிமையை நிரூபிக்கும் இறுதியான ஆவணமாக கருதப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) சார்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் விளக்கத்தில், இந்த நிலைப்பாடு புதிதல்ல என்றும், நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள சட்ட விளக்கத்தின் அடிப்படையிலேயே இது கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை தொடர்பான விவகாரங்களில், இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாஸ்போர்ட் இந்திய குடிமக்களுக்கே வழங்கப்பட்டாலும், அதன் முதன்மை நோக்கம் சர்வதேச பயணத்தை எளிதாக்குவதுதான் எனவும், அது தனித்து குடியுரிமைக்கான உறுதியான சட்ட ஆதாரமாக பயன்படுத்தப்படாது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் தனித்து குடியுரிமைக்கான இறுதி ஆதாரமாக கருதப்படுவதில்லை என்ற விவாதமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் இந்த விளக்கம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது புதிய கொள்கை மாற்றம் அல்ல; ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியதே என அரசு குறிப்பிட்டுள்ளது
