திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி எம்.பி. துரை வைகோ புத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதில், துரை வைகோ எம்பி பேசியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், காலை உணவு திட்டம் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதன்மூலம் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி பெறும் வகையில் ஏறத்தாழ ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் கோடி பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 1,127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 73 விழுக்காடு ஒப்பந்தங்கள் நிறைவுபெற்று லட்சக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதனை மத்திய அரசு நிறுவனமான எம்பாளயிமென்ட் பிராவிடன்பண்ட ஆர்கனைசேஷன் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 29 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று கூறியுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டு முயற்சி தொடர்வதற்கு நாம் உதயசூரியனை ஆதரிக்க வேண்டும்.
திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் கே.என்.நேரு திருச்சிக்கு கோடி கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக தலைநகர் சென்னைக்கு நிகராக பஞ்சப்பூரில் ரூ. 300 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 140 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சரக்கு வாகன முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.415 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா, ரூ.236 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, ரூ.76 கோடி மதிப்பீட்டில் பொன்நகர் } ராம்ஜி நகர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம், ரூ.26 கோடி மதிப்பீட்டில் கிராப்பட்டி முதல் பஞ்சப்பூர் வரை சாலை, கோரையாற்றில் பாலம், ரூ.110 கோடி மதிப்பீட்டில் திருச்சி அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைப் பிரிவு கட்டடம், ரூ.376 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூரில் இணைப்புச் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கே.என்.நேரு சட்டப் பேரவை உறுப்பினராகி மீண்டும் அமைச்சரானால் இத்தொகுதி மேலும் மேம்பாடும். திமுகவுக்காக மட்டுமல்லாமல், கூட்டணிக்காக மட்டுமல்லாமல் இந்தத் தொகுதி மக்களின் நலனுக்காக கே.என்.நேரு சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வாகி அமைச்சராக வேண்டும்.
இதேவேளையில் தமிழகத்துக்கு மத்திய அரசு இழைத்த அநீதியையும் குறிப்பிட வேண்டும். மதுரை, கோவை நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் இருப்பதாகக் கூறி மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதேநேரம் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள ஆக்ரா போன்ற வடமாநில நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் நாம் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்.
ஜனநாயகம் வெற்றிபெற, சமூகநீதி வெற்றிபெற, மதச்சார்பின்மை வெற்றிபெற, மக்கள் நலத்திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் நீங்கள் ஆதரிக்க வேண்டிய வேட்பாளர் கே.என்.நேரு. வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன் என்றார்.
இந்த தேர்தல் பரப்புரையில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
