சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவருக்கு, கடந்த 2024ஆம் ஆண்டு வங்கியில் கடன் ஆலோசகராக பணியாற்றி வந்த பெரம்பூரைச் சேர்ந்த சிவகுமார் அறிமுகமானார்.
அப்போது சிவகுமார், அவரது மனைவி பத்மினி மற்றும் மகன் முகேஷ் ஆகியோர், தங்கத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என தினேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், முதலீட்டு பணிகளை பத்மினி கவனிப்பதாகவும், அதற்கு மகன் உதவியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய தினேஷ்குமார், கடந்த 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை நான்கு தவணைகளாக மொத்தம் ரூ.15 லட்சத்தை சிவகுமாரிடம் வழங்கியுள்ளார்.
இரண்டு மாதங்கள் கழித்து அசல் மற்றும் லாபத் தொகையை கேட்டபோது, சிவகுமார் தரப்பினர் முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தை திரும்பக் கேட்டு சென்ற தினேஷ்குமாரை கொலை மிரட்டல் விடுத்து, சிவகுமார் குடும்பத்தினர் தலைமறைவானதாக தெரிகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பெரம்பூர் காமராஜர் நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் (49) மற்றும் அவரது மனைவி பத்மினி (41) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய அவர்களது மகனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு டேப்லெட்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

