விருதுநகர் மாவட்டம் சேத்தூரைச் சேர்ந்த ‘பாஸ்ட் புட்’ கடை உரிமையாளர் வேலுச்சாமி (51). இவரது மகள் பிரியதர்ஷனியின் பிறந்தநாள் விழா நேற்று வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் கடையில் சிலிண்டர் தீர்ந்துவிட்டதாகப் பணியாளர் கூறவே, சிவகிரியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி (40) வீட்டிலிருந்து சிலிண்டர் எடுத்து வர வேலுச்சாமி காரில் புறப்பட்டார். பிறந்தநாள் கொண்டாட்ட உற்சாகத்தில் தூங்காமல் இருந்த அவரது பேத்தி கிருத்திகா (10), பேரன் ஹரிஷ் கைலாஷ் (7) ஆகியோரும் தாத்தாவுடன் காரில் ஏறிச் சென்றனர். இவர்களுடன் உறவினரான ராணுவ வீரர் வசந்த் (23) என்பவரும் சென்றார்.
நள்ளிரவு 1 மணி அளவில் சிவகிரி ‘செக் போஸ்ட்’ அருகே சென்றபோது, கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அதிகாலை 2 மணிக்கு அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் பார்த்தே போலீசாருக்குத் தகவல் தந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் கதவை உடைத்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேலுச்சாமி, கிருத்திகா மற்றும் ஹரிஷ் கைலாஷ் ஆகியோரின் உடல்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்த ராணுவ வீரர் வசந்த் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையிலும், முனியாண்டி தென்காசி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகளின் பிறந்தநாள் அன்றே இந்த கோர விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
