இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய் (83), டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் நிதின் ராய் தெரிவித்துள்ளார்.
அவரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள லோதி சாலையில் நடைபெற இருக்கின்றன.
தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் ஜங் பகுதியில் 1942-ஆம் ஆண்டு ரகு ராய் பிறந்தார். 1965-இல் தி ஸ்டேட்ஸ்மேன் நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1982-இல் இந்தியா டுடே இதழில் 10 ஆண்டுகள் புகைப்பட ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவரின் புகைப்படங்கள் பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவவித்துள்ளது.
புகழ்பெற்ற மேக்னம் போட்டோஸ் நிறுவனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய புகைப்படக் கலைஞர் இவர் தான். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், இந்தியாவின் கலாசாரம் மற்றும் வரலாற்றுத் தருணங்களைத் தனது கேமரா கண்களால் ஆவணப்படுத்தியவர்.
