நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. நேர்மையான, புது முகங்களுக்கான வரவுகளை எஸ்.பி. ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கிறார். இருப்பினும் பழைய முகங்களைச் சேர்ந்த பலர் முயற்சித்தும் வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களும், அவற்றுக்கு உட்பட்டு 33 காவல் நிலையங்களும் உள்ளன. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 280 சர்க்கிள் காவல் நிலையங்களை, தனி இன்ஸ்ெபக்டர் காவல் நிலையங்களாகத் தரம் உயர்த்தி உத்தரவிட்டப்பட்டது.
அதன்படி குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம், தென்தாமரைக்குளம், அஞ்சுகிராமம், கொற்றிகோடு, பளுகல், கடையாலுமூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்களில் தனி இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. புதிய இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் எண்ணிக்கை உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி இன்ஸ்பெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். குமரி மாவட்டத்தில் பணியில் இருந்தவர்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றதும், குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர்கள் பலர் மீண்டும் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். இந்த நிலையில் காவல் நிலையங்களில் பணியில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் பலரை இடமாற்றம் செய்யஎஸ்.பி.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
அதன்படி கடந்த மே, ஜூன் மாதங்களில் குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணியில் இருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஒரு சிலர் தாங்கள் பணியாற்றும் காவல் நிலையத்தில் இருந்து வேறொரு காவல் நிலையத்துக்குச் சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் சிலர் மாவட்டம் விட்டு மாவட்டம் தூக்கியடிக்கப்பட்டனர். இவ்வாறு இடமாற்றம் நிகழ்ந்த பின்னரும், இன்னும் பல காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது.
குறிப்பாக மாவட்ட தலைநகரான நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, நேசமணிநகர் காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர் இன்னும் நியமிக்கப்பட வில்லை. இரணியல், குளச்சல், குலசேகரம் ஆகிய காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாவட்டம் முழுவதும் சுமார் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அந்தந்த காவல் நிலையங்களை அருகில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தான் கவனித்து வருகிறார்கள். எஸ்.பி. ஸ்டாலினை பொறுத்தவரை இன்ஸ்பெக்டராக இருப்பவர்கள் நேர்மையுடன் பணியாற்றிட வேண்டும் என விரும்புகிறார்.
குறிப்பாக மாவட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களை நியமிப்பதை விட, புதிதாகப் பொறுப்புக்கு வருபவர்கள், ஓரளவு திறனுடன் பணியாற்றுவார்கள் என நம்புகிறார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் தள்ளி கொண்டே போவதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த மாவட்டத்தில் பல ஆண்டுகளாக எஸ்.ஐ. மற்றும் இன்ஸ்பெக்டர்களாக இருந்த பழைய முகங்கள் சிலர், மீண்டும் இந்த மாவட்டத்துக்கு வர துடிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார்கள். ஆனால் இவர்களில் சிலரின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால், எஸ்.பி. ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
