2027 ஜனவரி 15-ஆம் தேதி தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச்செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பயணிகள் முன்பதிவு கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள்

அதிகளவில் முன்பதிவு செய்யக் குவிந்தனர். பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டன.
இதனால், நேரடியாக முன்பதிவு கவுண்டர்களில் காத்திருந்த பயணிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான பயணிகளுக்கு RAC நிலை டிக்கெட்டுகள் கிடைத்த நிலையில், பலர் எதிர்பார்த்த டிக்கெட்டுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்தனர். ஆன்லைன் முன்பதிவிலும்

டிக்கெட்டுகள் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் தங்களுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்காத பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தைப்பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காகப் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற நிலையில், முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே முக்கிய ரயில்களில் இருக்கைகள் நிரம்பியது பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
