எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ மற்றும் ‘கோஸ்லா கா கோஸ்லா’ படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராஜேஷ் சர்மா. இவர் தோனி படத்தில் கோச்சாக வருவார்.
இந்நிலையில் நடிகர் ராஜேஷ் சர்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் பிலிம் சிட்டியில் பிரபாஸின் ‘Fauzi’ படப்பிடிப்பின் போது இவரை விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பாக, நடிகை சுதிபா சாட்டர்ஜி சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
பதிவிட்டிருந்த குறிப்பில், “ராஜேஷ் ஷர்மாவின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல் – புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்திற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பில் இருந்தபோது, நடிகர் ராஜேஷ் ஷர்மாவுக்கு பூச்சிக் கடி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பூச்சியாகவோ அல்லது விஷமுள்ள சிலந்தியாகவோ இருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் குறிப்பின்படி, அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதியில் ராஜேஷ் உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பூச்சி தன்னைக் கடித்ததை உணர்ந்தார். அந்த நேரத்தில் அது தீவிரமானதாகத் தெரியாததால், அவர் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்.
சுமார் ஆறு மணி நேரம் கழித்து, அவருக்கு வலது காலில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியதுடன், உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது உடல்நிலை மோசமடைந்த போதிலும், அவர் கொல்கத்தாவுக்குத் திரும்பும் விமானத்தில் ஏறினார். பயணத்தின் போது, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அமைதியின்றி உணரத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
ராஜேஷ் பின்னர் தாகுரியாவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிடைத்த தகவலின்படி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாள் ஆகியும், அவருக்குத் தொடர்ந்து மூச்சுத்திணறல் நீடிப்பதாகவும், அவரது வலது காலில் உள்ள தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. “தொற்று அவரது கால்விரல்களில் இருந்து முழங்கால் வரை பரவியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதியில் பெரிய கொப்புளங்களும் உருவாகியுள்ளன,” என்று அந்தக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ராஜேஷ் தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்றும், அவரது நிலைமை இன்னும் அபாயத்திலிருந்து முழுமையாக நீங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தேவையான அனைத்து பரிசோதனைகளும் சிகிச்சையும் நடைபெற்று வருகின்றன. நடிகரின் உடல்நிலை குறித்த அடுத்தகட்ட தகவல் நாளை பகிரப்படும் என்று சுதிபா தெரிவித்ததோடு, அனைவரும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
