திருச்சி விமான நிலையத்தில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் பொறுத்தவரை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருந்தது, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மீதமுள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை மின்சாரத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசுக்கு சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் சுமை உள்ளதால், எடுத்தவுடனேயே அதை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், துறை சார்ந்த அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில், அது குறித்த விவரங்களை ஆராய வேண்டும்.
முந்தைய ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது டெண்டர்களில் 30 முதல் 40 சதவீதம் வரை, சில இடங்களில் 50 சதவீதம் வரை கமிஷன் என்ற பெயரில் முறைகேடுகள் நடந்து வந்தது. தற்போது அந்த லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே அரசாங்கத்தின் செலவுகள் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
முறைகேடுகள் காரணமாகப் பல்வேறு டெண்டர்கள் மற்றும் ஆன்-கோயிங் ஒப்பந்தங்களுக்கான கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இந்த தாமதத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், உரிய முறைகளில் விரைவாக பணிகளை முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் கட்டமைப்பில் முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம். .
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் ரீதியாக எதிர் தாக்குதல், கருத்தியல் ரீதியான மாற்று கருத்து கூறுவது ஜனநாயகத்தின் அடிப்படை. அதே வேளையில் தனி மனித தாக்குதல், கொச்சைபடுத்தி பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது இது போன்ற விஷயங்கள் ஏற்புடையதல்ல. நாம் தமிழர் வேட்பாளர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு:- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம். அது அவரவர் உரிமை. இறுதி முடிவை எப்போதும் மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்று இவ்வாறு துரை வைகோ எம்பி கூறினார்.
