ஆசிய கோப்பை தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கோப்பையை வெற்றி பெற்றீர்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமைக்குரிய தருணம் இது என இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களது இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கட்டும் என அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை டி20 பைனலில், நடப்பு சாம்பியன் இலங்கை அணியை 72 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. மந்தனா, ஷபாலி இணைந்து இந்திய இன்னிங்ஸை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 129 ரன் சேர்த்து அசத்தியது. ஷபாலி 68 ரன் (39 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), மந்தனா 59 ரன் (39 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். கேப்டன் ஹர்மான்பிரீத் 14, ரிச்சா கோஷ் 17, தீப்தி 5 ரன் எடுக்க, இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் 111 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் சமாரி 36 ரன், விஷ்மி 20 ரன், நிலாக்ஷிகா 22 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஸ்ரீசரணி 4, தீப்தி 3 விக்கெட், கிராந்தி, ஷபாலி, பிரேமா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 72 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 8வது முறையாக மகளிர் ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
