செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத மூத்த நடிகை அம்பிகா: சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுப்பு
சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த நடிகை அம்பிகா, தனது தங்கை ராதா மீது பல்வேறு பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடிகை அம்பிகா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது சகோதரர் மல்லிகார்ஜீனன் மற்றும் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பேசிய அம்பிகா, தனது வாழ்வில் இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கூறித் உணர்ச்சிவசப்பட்டார். தனது தங்கை ராதா தன் மீது புகார் அளித்துள்ள நிலையில், ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருவதாகவும், தான் படப்பிடிப்பில் இருந்ததால் உடனடியாகப் பேச இயலவில்லை என்றும் கூறினார். ஏ.ஆர்.எஸ் கார்டன் குறித்துப் பேச அன்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சென்ற போது, அவர்தான் இந்த பெயரை வைக்குமாறு கூறியதாக நினைவு கூர்ந்தார். கஷ்டப்பட்டுச் சம்பாதித்து உருவாக்கிய ஏ.ஆர்.எஸ் கார்டன் தங்களுக்குக் குழந்தை போன்றது என்றும், அதில் தனக்குப் பெரும்பங்கு உள்ள நிலையில், திடீரென ஒருநாள் அதன் பெயர் பலகை மாற்றப்பட்டதைக் கண்டு தனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்ததாகவும் கண்ணீர் மல்கக் கூறினார். ஜூலை மாதமே இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துச் சான்றிதழ் பெற்றும், ராதா தரப்பினர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். வருமான வரிச் சோதனையின் போது கிடைத்த தங்கம் குறித்துக்

கேட்க முற்பட்ட போது, ராதா தன் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்றும், தங்கத்தின் மீது ராதாவுக்கு அதிக ஈர்ப்பு உண்டு என்றும் தெரிவித்தார். காசோலையைக் கொடுத்து நிறுத்தி வைத்தது ராதா, ஆனால் பணம் போய்க் காசோலை பவுன்ஸ் ஆனது எனக்கு எனும் போது, தான்தான் புகார் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தவறான காரியத்தைச் செய்துவிட்டு ராதா முந்திக்கொள்வதாகச் சாடினார். கூட்டாக உள்ள அந்தச் சொத்தில் தனக்கு 97 கோடி ரூபாய் வரை வர வேண்டியுள்ள நிலையில், தான் விலகிக் கொண்டது போலப் போலிச் சான்றிதழ் தயாரித்து வங்கியில் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அம்மா உயிரோடு இருந்தவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே விரும்பியதால் குடும்ப விவகாரத்தை வெளியே கொண்டு வர விரும்பவில்லை என்றும், சமரசப் பேச்சுவார்த்தைக்கு ராதா வந்தால் பேசத் தயார் என்றும் தெரிவித்தார். மேலும், தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுப் பழியை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அவர், ராதா மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடரப்படும் என்றும், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் இனி இதுகுறித்து வெளியில் பேசப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
