புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி, திருச்சி–திண்டுக்கல் சாலையில் வண்ணான் கோவில் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு, அரியாவூர், இனாம் மாத்தூர், பெரியநாயகி சத்திரம், பாகனூர், தாயனூர், கள்ளிக்குடி, புங்கனூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைக்கு அப்பகுதியில் உள்ள குளங்களின் நீர்வரத்து முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த குளங்களுக்கு கரூர் மாவட்டம் மாயனூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைத்து வருகிறது.
தற்போது காவிரியில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று வண்ணான் கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்து திருவரங்கம் ஆர்டிஓ தமிழ்மணி, திருவரங்கம் தாசில்தார் செல்வகணேஷ், மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரேகா, ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை நவலூர் குட்டப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் இரண்டு நாட்களில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
