Skip to content
Home » ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்த படம் தொடர்பான அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில், தங்க குடோனுக்குள் அதிரடியாக நுழையும் ரஜினி, அடியாட்களை துவம்சம் செய்து மிரட்டலாக பஞ்ச் வசனம் பேசுவதோடு, படத்தின் தலைப்பு ‘கூலி’ என்று முடிந்திருக்கும். அந்த வீடியோவில், இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளும், ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ எனும் பாடலின் இசை பின்னணியிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

ரஜினி
தற்போது, ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை பயன்படுத்தியது, ‘கூலி’ படக்குழுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இசைத்துறையில் காப்புரிமைக்காக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகிறார். “இசையமைத்த தனக்குதான் தன்னுடைய பாடல்கள் முழுவதும் சொந்தம். தனது பாடல்களை, அதனை பாடியவர்கள் கூட அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது. மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது. அதற்கு உரிய காப்புரிமையை செலுத்திவிட்டு பயன்படுத்தலாம்”என்று இளையராஜா தொடர்ந்து கூறி வருகிறார். இதை மீறுபவர்கள் மீது வழக்கும் தொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினியின் கூலி படத்தின் அறிமுக வீடியோவில், இளையராஜாவின் அனுமதியின்றி ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை இசையமைப்பாளர் அனிருத் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது’ என்று இளையராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!