தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (TNEA-2026) தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 1-ஆம் தேதி (01.07.2026) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தத் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், சிபிஎஸ்இ (CBSE) பாடப்பிரிவுக்கான மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் கடந்த ஜூன் 21-ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல் வெளியாகும் அதே ஜூலை 1-ஆம் தேதியன்று பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால், அவற்றைச் சரிசெய்து கொள்வதற்கான குறைதீர்ப்புக் காலம் (Grievance Redressal) ஜூலை 1 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
