Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கம்

6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கம்

தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகளை ஒன்றிய அரசு நாளை முதல் முடக்க உள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் ‘இ-கே.ஒய்.சி.’ மற்றும் தேவையான கள ஆய்வு மூலம் தகுதி உறுதி செய்யப்பட்டால், அவர்களின் ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையிலும், இலவசமாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், பயன்பாட்டில் இல்லாத போலி ரேஷன் அட்டைகள், இறந்தவர்களின் பெயரில் உள்ள ரேஷன் அட்டைகள் மற்றும் முகவரி மாறிச் சென்றவர்களின் பெயர்களில் உள்ள ரேஷன் அட்டைகள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

பொது விநியோகத் திட்ட தரவுத்தளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தவும், தகுதியற்ற பயனாளிகளை களையெடுக்கவும் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக இலக்கு சார்ந்த பொது விநியோக கட்டுப்பாட்டு உத்தரவில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை ஒன்றிய உணவுத்துறை தொடங்கியது.இந்த நிலையில், நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஆறு மாதங்களாக ஒருமுறை கூட ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி பயனாளர்களின் அட்டை உரிமங்களை தற்காலிகமாக முடக்குவதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக குடும்ப அட்டையை நிரந்தரமாக ரத்து செய்யும் நடவடிக்கை அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பயன்பாடற்ற அட்டைதாரர்களை கண்டறிந்து, அரசின் மானியக் கசிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (அக். 1) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. தற்போது நாடு முழுவதும் இ-கேஒய்சி சரிபார்ப்பு 90.6 சதவீதம் வரை எட்டியுள்ள சூழலில், எஞ்சிய பயனாளிகளை அடையாளம் காண இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு முடக்கப்பட்ட அட்டைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பயனாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களது நியாயவிலைக் கடைகள் அல்லது உணவுத்துறை இணையதளம் வாயிலாக நிலுவையில் உள்ள இ-கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க வேண்டும். பின்னர் உள்ளூர் உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகளின் நேரடி கள ஆய்வுக்குப் பின்னரே அந்த அட்டைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்.

இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் தரப்பில், ‘உண்மையான பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டையை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக இ-கேஒய்சி பதிவை புதுப்பிக்க வேண்டும். இந்த அவகாசத்திற்குள் விவரங்களை சமர்ப்பிக்காத பயனாளர்களின் ரேஷன் அட்டைகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஆறு மாதங்களாக ஒருமுறை கூட ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி பயனாளர்களின் அட்டைகள் முடக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் கூடா, எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கார்டுகள் முடக்கப்படும் என்பதனை ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. அதனால் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘இ-கே.ஒய்.சி.’ மற்றும் தேவையான கள ஆய்வு மூலம் தகுதி உறுதி செய்யப்பட்டால், அவர்களின் ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!