பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்குக் கார்டு அடிப்படையில் வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சில சுயநலக் கும்பல்களால் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் காரிகூட்டம் பகுதியிலும் ரேஷன் அரிசி முறைகேடாகக் கடத்தப்பட்டு வருவதாகப் அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாகப் புகார்களை அனுப்பி வந்தனர்.
நியாயவிலைக் கடையில் (ரேஷன் கடை) பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசி சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகக் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேரடியாகச் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரிசி கடத்தல் முறைகேடு நடைபெற்றது உறுதியானதைத் தொடர்ந்து, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ரேஷன் கடை விற்பனையாளர் சத்திய கவிதாவை தற்காலிகப் பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
