உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் மிக மோசமான ‘ரெட் ஸோன்’ (Red Zone) எனப்படும் அபாயக் கட்டத்தை எட்டக்கூடும் என சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) நிர்வாக இயக்குநர் ஃபாத்தி பிரோல் (Fatih Birol) எச்சரித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான ‘சத்தாம் ஹவுஸ்’ (Chatham House) கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் போர் சூழல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து புதிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ள நிலையில், கோடைக்கால சுற்றுலா மற்றும் பயணங்கள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
தினமும் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மாயம்! 1973, 1979-ஐ விட மோசமான சூழல்
தற்போதைய போர்ச் சூழல் மற்றும் கடந்த மார்ச் 4 முதல் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதன் காரணமாக, உலகச் சந்தையில் தினமும் சுமார் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐஇஏ (IEA) தெரிவித்துள்ளது. இந்த எரிசக்தி அதிர்ச்சியானது கடந்த 1973, 1979-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய் நெருக்கடிகள் மற்றும் 2022 உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிசக்தி தட்டுப்பாட்டை விடவும் மிகவும் கடுமையானது மற்றும் ஆபத்தானது என்று ஃபாத்தி பிரோல் விவரித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகளில் கூட எண்ணெய் உற்பத்தி அடுத்த ஓராண்டுக்கு முழுமையாக மீள வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தீர்வு என்ன? மூலோபாய எண்ணெய் இருப்புகளை (Strategic Reserves) திறக்கத் தயார்
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மிக முக்கியமான மற்றும் உடனடி தீர்வு, ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனையின்றி முழுமையாக மீண்டும் திறப்பது மட்டுமே. இருப்பினும், தட்டுப்பாட்டைச் சமாளிக்க IEA உறுப்பு நாடுகள் தங்களிடம் உள்ள ‘மூலோபாய எண்ணெய் இருப்புகளை’ (Strategic Petroleum Reserves) கூடுதல் அளவில் சந்தையில் வெளியிடத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் சில நாடுகள் கச்சா எண்ணெயை வெளியிட்ட போதிலும், இன்னும் 80% கூட்டு இருப்பு நிதிகள் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று எரிசக்தியை நோக்கித் திரும்பும் உலக நாடுகள்: இந்தியாவின் புதிய உத்தி
மத்திய கிழக்கு நாடுகளின் “பாதுகாப்பான எரிசக்தி விநியோகஸ்தர்” என்ற நம்பகத்தன்மை இந்த போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலக நாடுகள் இனிவரும் காலங்களில் மாற்று ஆற்றல் உத்திகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கும். சூரிய ஒளி மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், அணுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewables) போன்ற உள்நாட்டு எரிசக்தி விருப்பங்களுக்கு உலகளவில் பெரிய ஊக்கம் கிடைக்கும்.
இந்தியாவிலும் கூட, பிரதமர் நரேந்திர மோடி கச்சா எண்ணெய் இறக்குமதிச் சார்ந்து இருப்பதை குறைக்கவும், நாட்டின் ஆற்றல் சுயசார்பை மேம்படுத்தவும் மாற்று எரிசக்தி வழிகளை தீவிரமாக ஆராய பல்வேறு அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
