திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்; ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை ஊராட்சிப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் பட்டியலின மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா

ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித் தரக் கோரியும் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மனு அளித்தனர்.
சோமரசம்பேட்டை பகுதியில் கடந்த 1996-ஆம் ஆண்டு சுமார் 65 பட்டியலினக் குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது. அன்று முதல் அப்பகுதியிலேயே தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டு மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதிக்கு மின்சாரம், சாலை மற்றும் குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் கீழ், இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக காலி செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்குத் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மீண்டும் எங்களுக்கு அதே இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்க வேண்டும். தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள எங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பதிலாக, அரசு தொகுப்பு வீடுகளைக் கட்டித் தர வேண்டும். நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் மின்சாரம், சாலை மற்றும் குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
