Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் குடிநீர் தொட்டி உடையும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்

பலமுறை சொல்லியும் பஞ்சாயத்து தூங்குது” ; கோவையில் ஊழியர்களின் அலட்சியத்தால் வழிந்தோடி வீணாகும் குடிநீர் – மேல்நிலைத் தொட்டி உடையும் அபாயம் – வைரல் வீடியோ !!!

​ கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைத் குடிநீர்த் தொட்டியில், ஊழியர்களின் அலட்சியத்தால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வழிந்தோடி வருவதோடு, தொட்டி சேதம் அடைந்து உடையும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி வாலிபர் ஒருவர் வேதனையுடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


கோவை மாவட்டம், பேரூர் அடுத்த செட்டிபாளையம், ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பிரம்மாண்ட உயர்மட்டக் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் பணியைப் பகுதி நேர ஊழியர்கள் கவனித்து வருகின்றனர்.

​இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தொட்டி முழுமையாக நிரம்பிய பிறகும், மோட்டாரை அணைக்காமல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்து வந்து உள்ளனர்.

இதனால், தொட்டியின் மேற்பகுதியில் இருந்து தண்ணீர் அருவி போலக் கொட்டி, பல மணி நேரமாக வீணாகச் சாலையில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

​“தொட்டியே உடைஞ்சு விழப்போகுது!” – பொதுமக்கள் வேதனை:

​தண்ணீர் தொடர்ந்து தொட்டியின் வெளிச்சுவர்களில் வழிந்தோடுவதால், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, தூண்கள் பாசிபிடித்துப் பலவீனம் அடைந்து வருகின்றன.

“இதே நிலை நீடித்தால், எந்த நேரத்திலும் இந்த மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி மொத்தமாகச் சேதமடைந்து உடைந்து விழும் அபாயம் உள்ளது.

அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுற்றி உள்ள வீடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்” என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

​இதுகுறித்து ஆறுமுக கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வீணாகும் குடிநீரையும் பலவீனமாகக் காட்சி அளிக்கும் தொட்டியையும் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார்.

​அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,
​“இந்தத் தண்ணீர் தொட்டியில இருந்து தினமும் இப்படித் தான் தண்ணி வேஸ்ட்டா கொட்டுது. இதனால தொட்டி சேதமடைஞ்சு எப்ப வேணாலும் உடையுற நிலைமையில இருக்கு. இது சம்பந்தமா நாங்க செட்டிபாளையம் பஞ்சாயத்து ஆபீஸ்ல பலமுறை நேர்ல போய் புகார் அளிச்சுட்டோம். ஆனா, அவங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. பெரிய விபத்து நடக்குறதுக்கு முன்னாடி அதிகாரிகள் இதைப் பார்த்து நடவடிக்கை எடுப்பாங்களா ?” என்று மிகுந்த வேதனையுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

​தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி, நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு எதிராகப் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

error: Content is protected !!