தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.6 கோடியே 78 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், உயர்ரக அச்சு இயந்திரங்கள் மற்றும் போலி வாகனப் பதிவு எண்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஹைதராபாத் அருகே அப்துல்லாபூர் பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஃபியூச்சர் சிட்டி காவல் ஆணையர் சருண் ஜோஸ் தலைமையில் ஷாத்நகர் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்துல்லாபூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.500 நோட்டுகளாக மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரில் இருந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இப்ராஹிம்பட்டினம் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுக்கு உதவியாக மேலும் மூன்று பேர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கும்பல் அப்துல்லாபூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு உயர்ரக அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஆரம்பத்தில் வாடகைக் கார் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் கள்ள நோட்டுகளைத் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக குஜராத்தில் இருந்து உயர்ரக அச்சு இயந்திரங்கள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி வந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலீசார் அல்லது வேறு யாராவது தங்களைத் தடுக்க முயன்றால் அவர்களைச் சமாளிப்பதற்காக போலீஸ் சீருடைகள், வாக்கி டாக்கிகள் மற்றும் போலி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் கும்பலிடமிருந்து ரூ.6 கோடியே 78 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், அச்சு இயந்திரங்கள், போலி வாகனப் பதிவு எண்கள் மற்றும் போலீஸ் உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் மற்ற மூன்று பேரும் வேறு ஒரு வழக்கில் தொடர்புடைய காவல் நிலையத்தால் பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பலின் பின்னணி மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட விதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
