தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா? சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?. தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்துணிவு எங்கிருந்து உங்களுக்குவந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை; காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா? சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்; ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. “ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்…”- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல், அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல், அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல; அது எமது மண்ணின் அடையாளம்! அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு.
எனவே, தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
