தஞ்சாவூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணியை கடந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் பேசியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று இரவு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இரவு 10 மணி வரைதான் ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், இந்தக் கூட்டத்தில் இரவு 9.30 மணியளவில் பேசத் தொடங்கிய சீமான் 10 மணியை கடந்து பேசினார்.
அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே சீமானை நோக்கி டவுன் டி.எஸ்.பி. ஆர். சோமசுந்தரம் கைக்கடிகாரத்தைக் காண்பித்து நேரமாகிவிட்டது என முன்னெச்சரிக்கை செய்தார். தொடர்ந்து 10 மணி கடந்த பின்னரும் பேசிய சீமானிடம் எச்சரித்தார். ஆனால், அவர் வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி, தொடர்ந்து 10.10 மணி வரை பேசினார். இதனால், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
