Skip to content

குடிநீரில் கழிவுநீர் கலப்பு- காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல், நோய் தொற்று அச்சம் தீவிரம்!

திருப்பத்தூர் மாவட்டம், 36-ஆம் வார்டு திருமால் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த பல வாரங்களாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்சனை தற்போது தீவிரமடைந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருமால் நகர் பகுதிக்கு பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை முறையாக தூர்வாரப்படாததே இந்த துர்நாற்றமும், கழிவுநீர் கலப்பும் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக பொதுமக்கள் கூறுகின்றனர். சாக்கடையின் துர்நாற்றம் வீடுகளுக்குள் நுழைவதோடு மட்டுமல்லாமல், குடிநீரில் நேரடியாக கழிவுநீர் கலக்கத் தொடங்கியதால் தினசரி வாழ்வே கடினமாகி விட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மற்றொரு பெரிய பிரச்சனையாக, நகராட்சி தண்ணீர் வண்டி வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்தாலும் திருமால் நகர் பகுதிக்கு அது வருவதில்லை என்றும், கேட்டாலோ அலட்சியமாக “நீங்கள் போய் மனு கொடுங்கள்” என்ற பதில் கூறப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இந்த அசுத்தமான குடிநீரை குடிப்பதன் காரணமாக குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட பலர் சொறி, சிரங்கு, வயிற்றுப்போக்கு போன்ற நோய் தொற்றுகளுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நோய் பரவலின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்த மோசமான சூழல் மீண்டும் தொடர்ந்ததால், இன்று திருமால் நகர் மக்கள் பெரும்பான்மையாக காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களின் கோரிக்கையை உணர்த்தினர். நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

திருமால் நகர் மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உடனடி நடவடிக்கை தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!