கரூர் அருகே மாயனூர் கதவணையில் தேங்கியுள்ள காவிரி நீர், பச்சை நிறத்தில் ஆயில் படலம் போல் காட்சியளிப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே 96 மதகுகள் கொண்ட கதவணை அமைந்துள்ளது. அமராவதி ஆறு காவிரியில் சங்கமிக்கும் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கதவணையில், காவிரி நீர் சேமிக்கப்பட்டு பின்னர் ஆற்றிலும், கிளை வாய்க்கால்களிலும் திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போது கதவணை முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் நிலையில், காவிரியில் வரும் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாயனூர், புகழூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழையை பயன்படுத்தி காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாயனூர் காவிரி நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது, மேலும் நீரில் ஆயில் படலம் போன்று மிதந்து செல்கிறது.
கழிவுநீர் கலப்பால் காவிரி ஆற்றில் உள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நீர் உகந்ததாக இருக்காது என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காவிரி நீர் சென்னை மாநகரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீராக கொண்டு செல்லப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்தி வரும் நிலையில், ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்.
எனவே, காவிரி ஆற்றில் சாயப்பட்டறைகள் மற்றும் தனியார் ஆலைகளின் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து, நீர் மாசுபடுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
