கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை – நேதாஜி நகர் பகுதியில் உணவகம் ஒன்று நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 அன்று அந்த உணவகத்தை மீண்டும் திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்து தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போதிய வெளிச்சமின்றி இருந்த சமையலறைக்குள் வழிதவறி வந்த அரிய வகை

பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்து மறைந்து இருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு (Wildlife & Nature Conservation Trust – WNCT) தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த WNCT மீட்புக் குழுவினர் மோகன் மற்றும் மோனா ஆகியோர், ஊழியர்களுக்கு எவ்வித அச்சமும் ஏற்படாத வகையில், சமையல் அறைக்குள் மறைந்து இருந்த அந்தப் பாம்பைச் சாதுரியமாகப் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பாம்பு குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கையில், “இது ‘வெள்ளிக்கோள்வரையன்’ (Common Wolf Snake) வகை பாம்பாகும். இவ்வகை பாம்புகள் உடலமைப்பில் ஆபத்தான ‘கட்டுவிரியன்’ பாம்பு போன்று வெள்ளை நிறக் கோடுகளுடன் காட்சி அளித்தாலும், இவை மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காத முற்றிலும் நஞ்சற்ற (Non-Venomous) சாதுவான பாம்புகளாகும். வீடுகளில் உள்ள பூச்சிகள் மற்றும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் இயல்புடையவை” எனத் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாகப் பூட்டி இருக்கும் கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்கும் போது, போதிய வெளிச்சத்துடன் கவனமாகச் சென்று சுத்தம் செய்வதே பாதுகாப்பானது என்றும், பாம்புகள் தென்பட்டால் அடித்துக் கொல்லாமல் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் WNCT அமைப்பினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
