சுற்றுலா சென்ற இடத்தில் வெளிநாட்டு கடற்கரையின் தூய்மையை கண்டு இந்திய பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்தியரான மெஹைக் என்பவர், சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள கடற்கரைகளை பார்வையிட்ட அவர், அதன் தூய்மையைக் கண்டு வியப்படைந்ததுடன், இந்தியாவுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இலங்கை நாடு என்னை சங்கடப்பட வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஒரு சிறிய நாடு தங்களது கடற்கரைகளை மிகத் தூய்மையாக வைத்துள்ளது. அங்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலோ அல்லது குப்பைகளோ கூட கண்ணில் படவில்லை. ஆனால், அதிக வளங்களும் பெரிய பொருளாதாரமும் கொண்ட நமது இந்தியாவில் கடற்கரைகளை ஏன் தூய்மையாக பராமரிக்க முடிவதில்லை? நான் இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடவில்லை. நம்மைப் போன்ற ஒரு வளரும் நாட்டுடன் தான் ஒப்பிடுகிறேன். இதற்கு நாம் என்ன காரணம் சொல்லப் போகிறோம்? பணமில்லாதது காரணமல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
உண்மையிலேயே எதுதான் பிரச்னை?’ என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், இந்திய பள்ளிகளில் குடிமைப் பண்பு மற்றும் ஒழுக்கம் குறித்து பாடம் நடத்த வேண்டும் என்றும், சாலைகளில் குப்பைகளை வீசும் மக்களின் பழக்கம் மாற வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
