Skip to content
Home » பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

  • by Senthil

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த பெண்ணை ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த கதிரியக்கவியல் முதுகலை மருத்துவர் கோகுல கிருஷ்ணன் அந்த பெண் நோயாளியிடம் பரிசோதனை என்ற பெயரில் ஆடைகளை கழற்றச்சொல்லி அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நோயாளி, மருத்துவர் கோகுல கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு பெண் மருத்துவர் ஒருவர் ஒடி வந்துபோது ஸ்கேன் மையத்தில் இருந்து கோகுல கிருஷ்ணன் அவசரம் அவசரமாக வெளியேறினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பேரில் நிர்வாகம் 3 பேர்‌ கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
பின்னர் விசாரணை குழு அளித்த பரிந்துரையின் பேரில் கதிரியக்கவியல் முதுகலை மருத்துவர் கோகுல கிருஷ்ணனை 6 மாதம் பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சங்குமணி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை அழைத்து மருத்துவமனை நிர்வாகம் சம்மந்தப்பட்ட மருத்துவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், அவரது ஒரு மாத ஊதியத்தை வாங்கித் தருவதாகவும் கூறி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.‌

அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் நோயாளி இது குறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவர் கோகுல கிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ஸ்டான்லி மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!