மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா, ஏற்கனவே கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் கிளர்ச்சிகளுக்கு மத்தியில் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சிக்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சுஷ்மிதா தேவ் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி உடனடியாக ஏற்குமாறு கோரியுள்ளார். இதற்கு முன்பு டிஎம்சியின் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராயும் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமாவைத் தொடர்ந்து சுஷ்மிதா தேவ், அசாம் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான Himanta Biswa Sarmaவை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பு அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அவர் பாஜகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து சுஷ்மிதா தேவோ அல்லது பாஜக தலைவர்களோ அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அசாமின் பராக் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், ஒருகாலத்தில் காங்கிரஸின் முக்கிய முகமாக இருந்தவர். ராகுல் காந்தியின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்ட அவர், 2021-ஆம் ஆண்டு காங்கிரஸை விட்டு வெளியேறி டிஎம்சியில் இணைந்தார். பின்னர் மம்தா பானர்ஜி அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார். கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு இந்தியாவில் டிஎம்சியின் முக்கிய முகமாக செயல்பட்டு வந்த நிலையில், அவரது விலகல் கட்சிக்கு அரசியல் ரீதியாக பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டிஎம்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு பல எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் கட்சித் தலைமையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சில எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் சுஷ்மிதா தேவின் ராஜினாமா, டிஎம்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடியை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
மேற்கு வங்க அரசியலில் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சுஷ்மிதா தேவின் அடுத்த அரசியல் முடிவு என்ன? அவர் பாஜகவில் இணைவாரா? அல்லது புதிய அரசியல் பாதையை தேர்வு செய்வாரா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் விவாதமாக மாறியுள்ளது. அவரது முடிவு டிஎம்சி மற்றும் மேற்கு வங்க அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
