தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் இன்று அதிகாலை 6 மணி முதல் போதிய பேருந்துகள் ஊருக்குள் வராததால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளுக்குத் திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று வேலை நாளாக இருப்பதால், அரசு அலுவலர்கள் மற்றும் இதர பயணிகளும் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்குச் செல்லக் காத்திருந்தனர். ஆனால், போதுமான பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதன் காரணமாக ஆத்திரமும் அவதியுமான பயணிகள், கயத்தாரில் இருந்து கோவில்பட்டிக்கும், கயத்தாரில் இருந்து திருநெல்வேலிக்கும் இருபுறமும் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்குப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஆண்களும் பெண்களுமாக ஆபத்தான முறையில் தொங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் முக்கிய மார்க்கத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாதது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலியாவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு உரிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
