Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரான்ஸில் போராட்டத்தால் ஊரடங்கு – கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பிரான்ஸில் போராட்டத்தால் ஊரடங்கு – கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்களின் பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாட்டின் தென்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் பாரிஸில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்தப் போராட்டம் பிரான்ஸ் முழுவதும் பரவியது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, பொதுச் சேவைகளின் தரம் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு தொழிற்சங்கத்தினரும் பொதுமக்களும் போராட்டத்தில் இணைந்ததால், அதன் தீவிரம் மேலும் அதிகரித்தது.

பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் இமானுவல் மேக்ரான் எச்சரித்தபோதிலும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாரிஸ், லியோன், லிமோஜ், மார்செய் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பதற்றம் நிலவும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இதுதொடர்பான அதிகாரம் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார். மேலும், கலவரங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினருக்கு உதவியாக ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் இதுவரை சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களின் வருகை அதிகரித்துள்ளதால், பாரிஸ் நீதிமன்றங்களில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வன்முறைச் சம்பவங்களால் பாரிஸ் நகரின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈபிள் கோபுரத்தைக் காண வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எந்தவிதப் பதற்றமும் இன்றி செல்ஃபி எடுத்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மறுபுறம், பிரான்ஸின் தென்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. செயின்ட் மார்டின், டிகிரா உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், மறுபுறம் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் எனப் பிரான்ஸ் நாடு ஒரே நேரத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!