பால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நுகர்வோருக்கு விற்கப்படும் பால் லிட்டருக்கு 8 ரூபாய் உயர்வு: லிட்டர் ரூ.46-க்கு விற்பனையான பால் முன்னறிவிப்பு ஏதுமின்றி ரூ.54-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
அரியலூரில் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுமார் 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, தினசரி காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பால் கொள்முதல் செய்கின்றனர்.
நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் லிட்டர் அளவிற்கு அரியலூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பால், திருச்சி, சென்னை உள்ளிட்ட ஆவின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு

வருகின்றது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்களுக்கும், சில்லறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் செலவீனத்தை கணக்கில் கொண்டு பாலுக்கான கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 7 ரூபாய் உயர்த்தி வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து, சில்லறை பால் வாங்கும் பொது மக்களுக்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி லிட்டர்

ஒன்றுக்கு 8 ரூபாய் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கான காரணம் குறித்து பால் கூட்டுறவு சங்கத்தினரிடம் கேட்டபோது, ஆவின் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் பாலுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.7 ஊக்கத்தொகை என்பது கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுவதாகவும், நுகர்வோருக்கு விற்கப்படும் பாலுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே இதனை ஈடுகட்ட சாமானிய மக்களான நுகர்வோர்களிடம் கூடுதலாக லிட்டர் ஒன்றுக்கு 8 ரூபாய் விலை உயர்த்தியுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
1 லிட்டர் பால் ரூ. 46-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென 8 ரூபாய் விலை உயர்த்தி, பாலுக்கு 54 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை பால் வாங்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் அன்றாட குடும்ப செலவிற்கு போதாக்குறை உள்ள நேரத்தில், திடீரென லிட்டருக்கு ரூ. 8 விலை உயர்த்தப்பட்டுள்ளது எங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் குழந்தைகளுக்கு 1/2 லிட்டர் பால் வாங்கிய நிலையில், இனி வெறும் 300 மிலி மட்டுமே வாங்க முடியும் எனவும் வேதனைபட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உயர்த்தப்பட்ட இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
